Friday, May 20, 2011

வல்லிக்கண்ணனும் , அவ்வை.டி.கே.சண்முகமும் ...



( யுகமாயினி இதழில் தி.க.சி எழுதிய தொடரின் ஒன்பதாம் பாகம் )

வல்லிக்கண்ணனுக்கும் - அவ்வை.டி.கே.சண்முகத்திற்கும் இடையிலான நட்புறவு , பல சுவையான தகவல்களையும் , திருப்பங்களையும் கொண்டது . அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே கூறுகிறேன்.

1942-ஆம் ஆண்டு துவக்கத்தில் ஒரு முழு நேர எழுத்தாளனாக வாழ வேண்டும் என்ற கொள்கையை உறுதியாக பற்றி நின்ற வல்லிக்கண்ணன் , குடும்பத்தில் ஏற்பட்ட நிரந்தரமான பொருளாதார நெருக்கடி , அவற்றிலிருந்து மீளும் வழிகள் இவை குறித்தும் ஆழமாக சிந்தித்தார் . அவருக்கு அப்போது வாழ்க்கை ஒரு பெரும் போராட்டமாகவே இருந்தது . எனவே இந்த வாழ்க்கைச் சிக்கலிலிருந்து மீள்வதற்காக பல வழிகளில் அவர் முயன்றார் . ' தனக்கு வேலை கிடைக்குமா ... ' எனக் கேட்டு , பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் , கலைஞர்களுக்கும் தொடர்ந்து அவர் கடிதங்கள் அனுப்பி வந்தார். இந்த எண்ணத்தில் தான் , அப்போது தமிழகத்தில் மிகப் பிரபலமாக இருந்த டி.கே.எஸ் நாடக சபாவின் தலைவரான டி.கே.சண்முகத்திற்கும் ஒரு மடல் எழுதினார் . இந்நாடக சபாவை டி.கே.சங்கரன் , டி.கே.முத்துசாமி , டி.கே.சண்முகம் , டி.கே.பகவதி ஆகிய நான்குச் சகோதரர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் நடத்தி வந்தார்கள். இந்நால்வரும் நாடகக்கலை மேதை சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்கள் ; தத்துபுத்திரர்கள் போல வளர்க்கப்பட்டவர்கள் .

அந்தக் காலத்தில் ' பாய்ஸ் கம்பெனி ' என்ற பெயரில் தான் , நிறைய நாடகக் கம்பெனிகள் தமிழகத்தில் இயங்கி வந்தன . அவற்றில் , சங்கரதாஸ் சுவாமிகளின் பராமரிப்பில் வளர்ந்து வந்த இந்நால்வரின் பாய்ஸ் கம்பெனியும் ஒன்று . சங்கரதாஸ் சுவாமிகளின் மறைவிற்கு பின்னர் , அவரது மரபைப் பின்பற்றி வந்த இச்சகோதரர்கள் புராண நாடகங்களுடன் , காலத்தின் தேவைக்கேற்ப சமூக நாடகங்களையும் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் , பாலக்காடு போன்ற கேரளத்தின் தமிழ்ப் பகுதிகளிலும் அரங்கேற்றி வந்தனர் . 1930 - ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ' மேனகா ' எனும் நாவலை நாடகமாக்கி இவர்கள் நடித்தனர் . 1935-இல் அந்நாடகம் இயக்குநர் ராஜா சாண்டோ இயக்கத்தில் ' மேனகா ' என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்து மக்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றது . நாடகச் சகோதரர்கள் நால்வரும் பங்களித்திருந்த இத்திரைப்படத்தில் , இரண்டாவது சகோதரர் டி.கே.முத்துசாமி பெண் வேடமேற்று நடித்தது குறிப்பிடத்தக்கது . 1935-க்குப் பிறகு பற்பல பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு ' டி.கே.எஸ் நாடக சபா ' சற்று வளர்ந்திருந்தது . பத்திரிக்கைகள் மட்டுமன்றி , பொதுமக்களிடமிருந்தும் இந்நாடக சபாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது .

1939 முதல் 1945 வரை , இரண்டாம் உலகப் போர் நடந்து வந்த காலம் ; வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக நாடெங்கும் சுதந்திரப் போர் மூண்டெழுந்த காலம் . இந்தக் காலக்கட்டத்தில் , வெறும் புராண நாடகங்களை மட்டும் நடத்திக் கொண்டிருக்காமல் , மகாகவி பாரதி வழியில் நாட்டு விடுதலைக்காக நாடகக் கலையும் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கில் டி.கே.எஸ் நாடக சபா செயல்பட ஆரம்பித்தது . இதற்குச் சான்றாக வெ.சாமிநாத சர்மா எழுதிய ' பாணபுரத்து வீரன் ' எனும் நாடகத்தை இவர்கள் அரங்கேற்றியதையும் , அது பிரிட்டிஷ் ஆட்சியரால் தடை செய்யப்பட்டதையும் கூறலாம் . நாஞ்சில் நாட்டில் பிறந்த டி.கே.எஸ். சகோதரர்கள் நால்வருமே நாட்டுப்பற்றும் , மொழிப்பற்றும் , இனப்பற்றும் கொண்டவர்கள் . இவர்கள் மனோன்மணியம் சுந்தரனாரின் உறவினர்கள் என்று நானறிகிறேன் . அது மட்டுமல்ல , கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பூரண அன்பையும் , ஆதரவையும் இவர்கள் பெற்றிருந்தார்கள் . அத்துடன் நாஞ்சில் நாட்டு பூதப்பாண்டியில் உதித்த தோழர் ஜீவானந்தத்தின் மீது அளவற்ற அன்பும் , மதிப்பும் கொண்டு , அவரை தம் சொந்த சகோதரர்களில் ஒருவராகவே கருதினர் . வெள்ளையர் ஆட்சியின் போது , ஜீவா தலைமை தாங்கிய கட்சி தடை செய்யப்பட்டு , அவர் வேட்டையாடப் பட்டார் . அப்போது தலைமறைவாக இயங்கி வந்த ஜீவாவிற்கு டி.கே.எஸ் நாடக சபா சில காலம் அடைக்கலம் கொடுத்தது என்பதுவும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் செய்தியாகும் .

இரண்டாம் மகா யுத்தக் காலத்தில் , இவர்களது நாடக அரங்கேற்றம் தொடங்குவதற்கு முன்பு திரைச்சீலையில் ' உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் ' என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது . மகாகவி பாடிய ' புதிய ருஷ்யா ' எனும் பாடலும் , தமிழ்த்தென்றல் திரு.வி.க தலைமை தாங்கிய தொழிலாளர் இயக்கப் போராட்டங்களும் , இவர்களது இந்த வாசகங்களுக்கு அடித்தளமாக இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது . சில ஆண்டுகளுக்குப் பின்னர் , 1941-42 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் , நாடகத்தின் தொடக்கத்தில் ' வாழ்க்கை சிறிது ; வளர்கலை பெரிது ' எனும் வாசகம் நாடகத் திரைச்சீலையில் இடம்பெற்றிருந்தது .

இத்தருணத்தில் பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் எழுதிய ' உயிரோவியம் ' எனும் நாவலை இவர்கள் நாடகமாக அரங்கேற்றினர் . தமிழகமெங்கும் அரங்கேறிய இந்நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது . 1941-க்குப் பிறகு கல்கியினுடைய வரலாற்று நாவல்களான ' பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு ' ஆகியவை தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் ரசித்துப் படிக்கப்பட்டன . தமிழ் மக்களின் ரசனையில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்ட டி.கே.சண்முகம் , ' ராஜராஜ சோழன் ' போன்ற வரலாற்று நாடகங்களை அரங்கேற்ற ஆரம்பித்தார் . டி.கே.எஸ். நாடக சபாவின் பேரும் புகழும் ஔங்குவதற்கு இத்தகைய வரலாற்று நாடகங்கள் பெரிதும் துணை புரிந்தன .

இந்தச் சூழ்நிலையில் தான் வல்லிக்கண்ணனுடைய கடிதம் டி.கே.சண்முகத்தை சென்றடைந்தது . ' டி.கே.எஸ் நாடக சபாவில் சிறிது காலம் தங்கி நாடகக் கலையில் பயிற்சி பெறவும் , நாடகங்கள் எழுதவும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் ' என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் வல்லிக்கண்ணன் . ஆனால் , ' இப்பொழுது தங்களை அழைத்துக் கொள்ள இயலவில்லை . பின்னாளில் வாய்ப்பு தருகிறோம் ' என டி.கே.சண்முகம் வல்லிக்கண்ணனுக்கு பதில் எழுதினார் . தன்னுடைய முயற்சி தோல்வியடைந்ததைப் பற்றி வல்லிக்கண்ணன் சிறிதும் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை.

காலச்சக்கர வேகத்தில் , 1943-47 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் , கிராம ஊழியன் ஆசிரியராக வல்லிக்கண்ணன் பணியாற்றிக் கொண்டிருந்த போது , திருச்சியிலும் , தஞ்சாவூரிலும் , டி.கே.எஸ் நாடகங்கள் நடத்தப்பட்டன . அந்த நாடகங்களை பற்றி கிராம ஊழியனில் விமர்சனங்கள் எழுத வேண்டும் என்றும் , சிறப்பு விருந்தினராக தங்கள் நாடக மன்றத்துக்கு வரவேண்டுமென்றும் வல்லிக்கண்ணனுக்கு அழைப்பு விடுத்தார் டி.கே.சண்முகம் . அப்பொழுது தான் ஒளவையார் நாடகத்தில் ' ஒளவையார் ' வேடத்தில் நடித்து , அவ்வை சண்முகம் எனும் பெயரால் தமிழ் மக்களின் நெஞ்சங்களின் இடம்புகுந்தார் டி.கே.சண்முகம் . வல்லிக்கண்ணன் கிராம ஊழியனில் எழுதிய நீண்ட விரிவான நாடக விமர்சனங்கள் , நாடக ரசிகர்களின் மத்தியில் டி.கே.சண்முகத்திற்கு பெரிய அங்கீகாரத்தையும் , கெளரவத்தையும் பெற்றுத் தந்தன . ஒரு நாடக விமர்சனம் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு உரிய சான்றாக வல்லிக்கண்ணனின் நாடக விமர்சனங்கள் அமைந்தன . இவை டி.கே.எஸ் நாடக சபாவின் வளர்ச்சிக்கு உதவின என்பதுடன் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சிக்கும் , எழுச்சிக்கும் கணிசமான பங்காற்றின என்று கூறலாம் . இதன் விளைவாக , ஒரு நாடகக் கலைஞன் - ஒரு பத்திரிக்கை ஆசிரியன் என்கிற நிலையைத் தாண்டி , வல்லிக்கண்ணனை தங்களுடைய உடன்பிறவா சகோதரர்களில் ஒருவராகவே ஏற்றுக் கொண்டனர் டி.கே.எஸ.சகோதரர்கள் . டி.கே.சண்முகத்தின் கருத்து எதுவோ , அதுவே டி.கே.எஸ சகோதரர்கள் அனைவரின் கருத்துமாகும் .

காலக்கிரமத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாக மூத்த சகோதரர்களான டி.கே.சங்கரனும் , டி.கே.முத்துசாமியின் நாகர்கோவிலில் தங்கி விவசாயத்தில் ஈடுபடலாயினர் . நாடக சபாவை நிர்வகிக்கும் பொறுப்பை டி.கே.சண்முகத்திடமும் , டி.கே.பகவதியிடமும் விட்டுவிட்டனர் . நாடக சபாவின் மூளையாகவும் , இருதயமாகவும் டி.கே.சண்முகம் விளங்க , நிர்வாக பொறுப்பு முழுவதையும் டி.கே.பகவதி ஏற்று திறம்பட செய்து வந்தார் . இவர்களிருவரும் வல்லிக்கண்ணன் பால் மாறாத அன்பு கொண்டிருந்தனர் . வல்லிக்கண்ணனுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பொருளாதார ரீதியில் உதவும் பொருட்டு , பல திட்டங்களை வகுத்திருந்தனர் டி.கே.எஸ் சகோதரர்கள் .

அப்பொழுது ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய ' பில்ஹணன் ' என்கிற நாடகத்தை டி.கே.எஸ் நாடக சபா ஈரோட்டில் அரங்கேற்றியது . இந்த நாடகம் பாரதிதாசனின் ' புரட்சிக்கவி ' எனும் காவியத்தைத் தழுவியதாகும் . இந்நாடகம் நூல் வடிவில் வந்து , அப்போது ' தினசரி ' யில் பணியாற்றிக் கொண்டிருந்த புதுமைப்பித்தனின் விமர்சனத்திற்கு வந்து சேர்ந்தது . பாரதிதாசன் காவியத்தின் தழுவல் என்று இந்நூலில் எங்கும் குறிப்பிடப்படவில்லை . ஏ.எஸ்.ஏ.சாமியின் நேர்மையற்ற போக்கைக் கண்டு கொதித்தெழுந்த புதுமைப்பித்தன் ' இரவல் விசிறி மடிப்பு ' எனும் தலைப்பில் தனது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் இந்த ஏ.எஸ.ஏ.சாமியின் ' முன்னேற்றத்தை ' புதுமைப்பித்தனால் தடுக்க முடியவில்லை . அவர் நாடகத்துறையில் இருந்து முன்னேறி ஜூபிடர் பிக்ஸர்ஸின் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்து விட்டார் . அப்போது அவர் ஆறு படங்களுக்கு கதை வசனம் எழுதவும் , இயக்கவும் வாய்ப்பு பெற்று புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்தார் . அவரைப் பயன்படுத்தி திரைப்படத்துறையில் வல்லிக்கண்ணனை ஈடுபடச் செய்து , அவரது வாழ்வுக்கு வளம் சேர்க்கலாம் என விரும்பினார் டி.கே.சண்முகம் .

அப்போது கிராம ஊழியன் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த வல்லிக்கண்ணனை ஜூபிடர் பிக்ஸர்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார் . மூவருக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்தன . தான் இயக்கும் ஆறு படங்களுக்கு கதை வசனம் எழுதித் தரவேண்டுமென்றும் , ஆனால் திரையில் வல்லிக்கண்ணனுடைய பெயர் வராது என்றும் தனது ஏழாவது படமான முருகன் டாக்கீஸ் எடுக்கும் ' ரத்னகுமார் ' எனும் படத்தில் கதை வசனத்தில் வல்லிக்கண்ணனுடைய பெயர் இடம்பெறும் என்றும் , அதே சமயம் ஆறு படங்களுக்கு பணியாற்றும் வல்லிக்கண்ணனிற்கு கணிசமான சம்பளமும், பிற வசதிகளும் செய்துத் தரப்படுமென்றும் , கிராம ஊழியனில் பணியாற்றினாலும் , திருச்சியிலிருந்து கோவைக்கு அடிக்கடி வந்து தன்னுடன் பணியாற்ற சகல வசதிகளும் வழங்கப்படவேண்டுமென்றும் ஆசை காட்டி பேரம் பேசினார் ஏ.எஸ்.ஏ.சாமி . ஆனால் அவரது நிபந்தனைகளை கண்ட வல்லிக்கண்ணன் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் கொண்டார் . எனினும் தனது கோபத்தையும் , வருத்தத்தையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை . ஒரு உண்மையாக கலைஞன் என்ற நிலையில் எந்தவொரு சூழ்நிலையிலும் தனது தன்மானத்தையும் , கெளரவத்தையும் அவர் அடகு வைக்கவோ , விற்கவோ விரும்பவில்லை . ' நான் பத்திரிக்கைதுறையில் தொடர்ந்து பணியாற்றவே விரும்புகிறேன் . இலக்கியத்துறையில் தான் எனது முழு ஈடுபாடும் உள்ளது ' என்று மென்மையாகவும் , உறுதியாகவும் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கூறி விட்டு பேச்சை முடித்துக் கொண்டார் . வல்லிக்கண்ணனின் முடிவு டி.கே.சண்முகத்திற்கு மிகுந்த ஏமாற்றமும் ,. வருத்தமும் அளிப்பதாக இருப்பினும் , அவரது சுயமரியாதைப் போக்கையும் , இலக்கிய தாகத்தையும் கண்டு வியந்து பாராட்டினார் .எனினும் வல்லிக்கண்ணனிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கவே அவர் விரும்பினார் .

சிறிது காலத்திற்குப் பின்னர் , கோவையில் நாடக மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் டி.கே.சண்முகமும் , வல்லிக்கண்ணனும் பங்கேற்றனர் . மாநாட்டின் இறுதியில் ' நாடகம் ' எனும் பெயரில் ஒரு மாத ஏடு துவங்குவது என்றும் , அதற்கு வல்லிக்கண்ணனை ஆசிரியராக நியமிப்பது என்றும் டி.கே.சண்முகம் முடிவெடுத்தார் . இதை வல்லிக்கண்ணனிடம் டி.கே.சண்முகம் நேரில் தெரிவித்து , பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி சொன்ன போது , அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது . தனது அருமை சகோதரர் டி.கே.சண்முகத்தின் அன்பு அழைப்பை ஏற்க வல்லிக்கண்ணன் மறுத்து விட்டார் . ஏனெனில் இந்த ஏற்பாடு தனக்கு ஒத்து வராது என கிராம ஊழியன் அனுபவத்தின் வாயிலாக வல்லிக்கண்ணன் நன்கு உணர்ந்திருந்தார் . தமது மறுப்பையும் மென்மையாக டி.கே.சண்முகத்திடம் தெரிவித்து விட்டார் . இந்த நிகழ்வால் டி.கே.சண்முகத்தால் வருந்தத் தான் முடிந்தது . எனினும் வல்லிக்கண்ணன் மீதான் அன்பையும் , மரியாதையையும் அவர் எள்ளளவும் குறைத்துக் கொள்ளவில்லை . டி.கே.சண்முகத்தின் இறுதிக்காலம் வரையில் இருவருக்கிடையேயான சகோதரப் பாசம் மென்மேலும் வளர்ந்து வந்தது .

' ரத்தபாசம் , மனிதன் ' போன்ற நாடகங்களை அரங்கேற்றிய மாபெரும் நாடகக் கலைஞன் அல்லவா அவ்வை.டி.கே.சண்முகம் ... ? !

நன்றி : யுகமாயினி - ஜனவரி 2011 இதழ்

1 comments:

  1. நான் இந்தக் கட்டுரை யுகமாயினி மே அல்லது ஜூன் இதழில் வர இருக்கும் கட்டுரை என எண்ணி சற்று ஏமாந்து போய் விட்டேன்.
    இருந்தாலும் வல்லிக் கண்ணன் பற்றிய கருத்துக்கள், ஓராயிரம் முறை வாசித்தாலும் அலுப்பு தருவதில்லை.

    இந்த எழுத்துக்களை வாசிப்பதை விட எனக்கு உலகில் வேறு முக்கியமான மதிப்பு கூடுதலான வேலைகளும் இல்லை

    ReplyDelete